search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் கோவில் கொள்ளை"

    திருப்பூரில் விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாளர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மயில் சாமி இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியலின் சீல் உடைக்கப்பட்டு தனியாக கிடந்தது.ஆனால் உண்டியலில் இருந்த பணம் எதுவும் திருட்டு போகவில்லை. கோவில் அலுவலக அறைக்கு சென்ற போது அந்த அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.

    அங்கு சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தகடு மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது. அவைகள் திருட்டு போய் இருந்தது. ரொக்கபணம் ஆகியவை திருட்டு போனது.இது குறித்து பூசாரி மயில் சாமி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.கைரேகை நிபுணர்களும் வரவைழக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. அதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கோவிலில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 வாலிபர்கள் கோவிலுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    அந்த காட்சியை வைத்து கொள்ளையர்களை அடையாளம்காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×